டைகர் ஷெராப்புக்கு முன் குறி வைக்கப்பட்ட நடிகர் அமீர் கான்... பரபரப்பு தகவல்

அமீர் கானின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்ததுடன், அவருடைய வீட்டை 3 முறை நெருங்கி சென்றுள்ளனர்.

டைகர் ஷெராப்புக்கு முன் குறி வைக்கப்பட்ட நடிகர் அமீர் கான்... பரபரப்பு தகவல்
Published on: 

மும்பை

நடிகர் டைகர் ஷெராப்புக்கு முன் நடிகர் அமீர் கான் குறி வைக்கப்பட்ட பரபரப்பு தகவல் வெளிவந்து உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் (வயது 36). நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகனான இவர், 'பாகி', 'பாகி-2'. 'வார்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில் புஷ்பா பார்க் என்ற இடத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் விளையாடி விட்டு கருப்பு நிற பி.எம்.டபிள்யூ. காரில் வீட்டுக்கு புறப்பட்டார். நடிகரை காண அவரது ரசிகர்கள் மைதானம் அருகில் குவிந்தனர். கார் மெதுவாக நகர்ந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென்று கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

நடிகர் டைகர் ஷெராப்

இதில், நடிகர் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினார். கார் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலானது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், சந்தேகத்தின் பேரில் சிறுவன் உட்பட 3 பேரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

11 பேர் கைது

இந்த வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பிராஞ்சல் தக்ரான் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனால், கைதுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

நடிகர் அமீர் கான்

இந்நிலையில், நடிகர் டைகர் ஷெராப்புக்கு முன் நடிகர் அமீர் கான் குறி வைக்கப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடக்கத்தில், நடிகர் அமீர் கானை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

ஆனால், அமீர் கானை நெருங்குவது சவாலாக இருந்தது. மும்பையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த கும்பல் முகாமிட்டு, அமீர் கானின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இதற்காக அவருடைய வீட்டை 3 முறை நெருங்கி சென்றுள்ளது.

விசாரணை

ஆனால், பல சமயங்களில் அவர் படப்பிடிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுவார். அல்லது வெளியே வராமல், வெகுநேரம் வீட்டிலேயே தங்கி விடுவார். இதனால், அவரை அணுக முடியாமல் போயுள்ளது.

இந்த தருணத்தில், டைகர் ஷெராப் எளிய இலக்காக இருந்துள்ளார். அவரை அடைவதில் பெரிய சிக்கல் இல்லை. இதனால், அவரை தங்களுடைய இலக்காக அந்த கும்பல் தேர்ந்தெடுத்து உள்ளது. ஏனெனில், விடுமுறை நாட்களில் அவர் கால்பந்து விளையாடும் வழக்கம் கொண்டிருந்துள்ளார். இது அவர்களுக்கு சாதக சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com