

சென்னை,
மகளைப் பற்றி அவதூறாக பரவும் தகவலுக்கு நடிகர் அர்ஜுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் சஞ்சனாவுக்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இந்த நேரத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து நடைபெற்றதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகின. இந்தநிலையில், மகளைப் பற்றி அவதூறாக பரவும் தகவலுக்கு நடிகர் அர்ஜுன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலில், அன்ஜனாவின் திருமணத்தை முன்னிட்டு அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தங்களது அன்பையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் அன்பும் நல்வாழ்த்துகளும் எங்களுக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. எங்களை நினைத்து வாழ்த்திய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
ஆனால், இதுபோன்ற ஒரு விஷயத்தைப் பொதுவெளியில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
எனது இளைய மகளின் திருமணத்தின்போது, எனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து, அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார்.
ஆனால், ஒரு தந்தையாக, எனது மகளையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும்போது, யூகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், பூகங்களுக்கும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பொதுவெளியில் இருப்பது என்பது யார் வேண்டுமானாலும் கதைகளைப் புனைந்து பரப்புவதற்கோ, ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கோ உரிமம் அளிப்பதல்ல. எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் எப்போதும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால், எங்களது மௌனத்தை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக்கூடாது. அதேபோல், தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கும், பெரிதாக்கப்படுவதற்கும் எங்களது அமைதி இடமளிக்காது எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பத்திரிகைத்துறையையும் செய்தி வெளியிடும் பணியையும் நான் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன். இருப்பினும், உண்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தங்களது செய்திகளைப் பிரபலப்படுத்துவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் பரபரப்பாக்கும் சில ஊடகப் பிரிவுகள் தங்களது பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கிறது.
ஒரு தந்தையாக, எனது மகளுக்கும், கண்ணியத்துடனும், சுதந்திரத்துடனும், சுயமரியாதையுடனும் தனது வாழ்க்கையை வாழ்வதற்கான அவரது உரிமைக்கும் நான் எப்போதும் துணையாக நிற்பேன்.
இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரப்பப்பட்டாலோ அல்லது மேலும் பெரிதாக்கப்பட்டாலோ, அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மரியாதையும் கண்ணியமும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடியவை அல்ல.
இது எனது மகளைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தேர்வுகள் பொதுவெளியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது குறித்த விஷயமாகும். குறிப்பாக, குடும்பத்தின் ஆதரவு இல்லாத பெண்களுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே கடினமான சூழ்நிலையில் இருக்கும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தை இது மேலும் சிக்கலாக்குகிறது.
எந்தப் பெண்ணும் இதுபோன்ற சூழலைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. தனது வாழ்க்கையைத் தனக்குப் பிடித்தபடி வாழ்வதற்காக எந்தப் பெண்ணும் தன்னை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.