டைரக்டராகும் நடிகர் அரவிந்தசாமி

நடிகர் அரவிந்தசாமி மீண்டும் பிஸியாக நடிக்கிறார்.
டைரக்டராகும் நடிகர் அரவிந்தசாமி
Published on

பாஸ்கர் ஒரு ராஸ்கல், சதுரங்க வேட்டை-2, நரகாசுரன், வணங்கா முடி, செக்க சிவந்த வானம் ஆகிய 5 படங்களை நடிகர் அரவிந்தசாமி கைவசம் வைத்துள்ளார். இரண்டாவது ரவுண்ட் சினிமா பயணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நல்ல கதை, கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக வருகிறேன். அழுத்தமான கதை அமைந்தால் வில்லனாகவும் நடிப்பேன். மலையாளத்தில் மம்முட்டி நடித்த படத்தை தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பெயரில் உருவாக்கி உள்ளோம். இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறோம். விரைவில் டைரக்டராக முடிவு செய்துள்ளேன். கதை தயாராகியுள்ளது. புதுமுகங்களும் பிரபல நடிகர்கள் சிலரும் நடிக்கின்றனர். நடிகர்கள் சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.

படம் நன்றாக ஓடினால் அதிக சம்பளமும், நஷ்டம் அடைந்தால் குறைந்த சம்பளமும் கொடுக்கிறார்கள். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் யாருக்கு எனது ஆதரவு என்பதை சொல்ல முடியாது. ஓட்டு போடுவது ரகசியமானது. நீட் தேர்வு பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது. அதை எதிர்ப்பது ஒரு புறம் இருந்தாலும் அந்த தேர்வை எழுதித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்போது அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

கல்வி முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதில் விட்டுவிடவேண்டும். பெற்றோர்கள் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது.

இவ்வாறு அரவிந்தசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com