நடிகர் சங்க தேர்தல்; வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர்.
நடிகர் சங்க தேர்தல்; வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி
Published on

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.

இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்த தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர். தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு காலை முதல் வர தொடங்கியுள்ளனர்.

தேர்தலில் வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பல தடைகளை தாண்டி நடைபெறுகிறது. ஜனநாயக முறையில் அனுமதியளித்த நீதித்துறைக்கும், காவல் துறைக்கும் நன்றி என நடிகை ரோகிணி தெரிவித்து உள்ளார்.

தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆரி கூறியுள்ளார்.

அனைவரும் வந்து வாக்களித்தால் நன்றாக இருக்கும். சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என நடிகை காயத்ரி ரகுராம் பேட்டியளித்து உள்ளார்.

கண்டிப்பாக நல்லது நடக்க வேண்டும். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறியுள்ளார்.

தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமில்லை. நிச்சயமாக பாண்டவர் அணி தான் வெற்றி பெறும் என்று நடிகை கோவை சரளா தெரிவித்து உள்ளார்.

ஒரே நாளில் தேர்தல் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறைக்கு நன்றி. இது சினிமா குடும்பத்திற்குள் நடைபெறும் ஊடல். தேர்தலுக்கு பின் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என நடிகர் சின்னி ஜெயந்த் பேட்டியளித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com