

நகரி,
சிரஞ்சீவியின் மகளும் தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதா விஜயவாடா துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக இடம்பெற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்திரகீலாத்ரி துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில், நடிகர் சிரஞ்சீவியின் மகளும் தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதா சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம் தேவஸ்தானத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் சுஷ்மிதாவுக்கும் முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக அதிகாரி மேற்கொள்ளும் பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன், முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஜாத்திரை காலங்களில் தேவஸ்தான நிர்வாகத்துக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதும் அவரது பொறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, தேவஸ்தான குழுவில் உறுப்பினராக உள்ளார். அவரது சகோதரரும் நடிகருமான பவன் கல்யாண், ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். மற்றொரு சகோதரரான நாகபாபுவும் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.
இந்த வரிசையில் தற்போது சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவும் விஜயவாடா துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக இடம்பெற்றுள்ளார்.
சினிமா துறையில் மட்டுமின்றி, பொதுவாழ்விலும் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முக்கிய பொறுப்புகளை ஏற்று வருவது தற்போது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துர்கம்மா தேவஸ்தானத்தில் சுஷ்மிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்பு பேசுபொருளாகியுள்ளது.