

பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகையும், தர்ஷனின் தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதால் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 8 பேருக்கு கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, தர்ஷன் உள்பட 8 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். ஆனால் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி தர்ஷன் உள்பட 8 பேருக்கும் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சிறையில் நடிகர் தர்ஷனுக்கு 5 நட்சத்திர ஓட்டலில் வழங்கப்படும் வசதிகள் செய்து கொடுப்பதாகவும், இதுபோன்று நாட்டில் உள்ள எந்த சிறைகளிலும் முறைகேடுகள் நடக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
குறிப்பாக ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக ஐகோர்ட்டையும், சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 8 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். கடந்த 8½ மாதங்களாக தர்ஷன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந்தநிலையில், ரேணுகாசாமி கொலை வழக்கில் ஜாமீன் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகர் தர்ஷன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வக்கீல் ரஞ்சித் ரோட்டகி இந்த ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் ரேணுகாசாமி கொலை வழக்கில் சாட்சிகளிடம் நடக்கும் விசாரணை தாமதமாக நடந்து வருவதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மனுமீதான விசாரணை வருகிற 4-ந் தேதி நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.