

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி', 'கற்றது தமிழ்', 'கோ', 'ரவுத்திரம்', 'கலகலப்பு 2' போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்.
கடந்த பொங்கலுக்கு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஜீவாவுக்கு அடுத்தடுத்து படம் வரத் தொடங்கியுள்ளது. ‘பிளாக்’ பட இயக்குநரின் படம் மற்றும் ராஜேஷ் எம் இயக்கத்தில் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்போது இந்த வரிசையில் மேலும் ஒரு படத்தை இணைத்துள்ளார். அதாவது அவரது புது பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஜீவாவின் புதுப்படத்தை ‘கிடா’ பட இயக்குநர் ரா.வெங்கட் இயக்கவுள்ளார். ‘கிடா’ படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை கருடன் மற்றும் மாமன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் ஜூலை மாதம் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெற உள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தனது தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி இறந்த துயரத்தில் இருந்த ஜீவா, அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து தற்போது பழையபடி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.