கேரள கவர்னரிடமிருந்து கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் மம்முட்டி

இந்திய திரைப்பட உலகில் மம்முட்டி ஆற்றிய மகத்தான பங்களிப்பை பாராட்டி விருது வழங்கப்பட்டதாக மகாத்மா காந்தி பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள கவர்னரிடமிருந்து கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற  நடிகர் மம்முட்டி
Published on

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டி தமிழில், மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மம்முட்டி, மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘களம்காவல்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது. பின், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ சுமாரான விமர்சனங்களையே பெற்றதால் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை.தற்போது, ‘மட்டஞ்சேரி மாபியா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மம்முட்டி கேரள அரசின் 7 மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் மம்மூட்டியின் சினிமா பங்களிப்பைப் பாராட்டும் விதமாக கேரளத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இந்திய திரைப்பட உலகில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு, மலையாள திரைப்படங்களை உலக அரங்கில் உயர்த்திய சாதனை மற்றும் சமூக அக்கறை கொண்ட பல கதாபாத்திரங்கள் மூலம் மக்களின் மனதில் தனி இடம் பிடித்தமை ஆகியவற்றை பாராட்டியே இந்த உயரிய விருது வழங்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டத்தை தமிழக-கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நடிகர் மம்முட்டிக்கு வழங்கி தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பட்டமளிப்புக்குப் பின் பேசிய நடிகர் மம்முட்டி “என் அப்பாவிற்கு நான் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனாலும், கடந்த 45 ஆண்டுகளாக நான் உங்களுக்கு சினிமா மூலம் சிகிச்சையளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் இறுதி மூச்சுவரை அதை செய்வேன்” என கூறினார்.

மம்முட்டி ஏற்கனவே கேரள பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகம் ஆகியவற்றிடமிருந்து கவுரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார். தற்போது மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வழங்கியுள்ள இந்த கவுரவம், அவருக்கு கிடைத்த மூன்றாவது கவுரவ டாக்டர் பட்டமாகும். இதன் மூலம் திரைப்பட உலகில் அவர் புரிந்த சாதனைகள் கல்வி மற்றும் கலாச்சார துறைகளிலும் உயர்ந்த அங்கீகாரம் பெற்றுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com