

கோவை,
இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முதல்-அமைச்சரை சந்திக்க இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் அரேபியன் உணவான மந்தி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. முழு கோழியுடன் ஆறு பேர் சாப்பிடக்கூடிய அளவு மந்தி உணவை ஒரே ஒருவர் சாப்பிடும் இந்த போட்டியை நடிகர் மன்சூர் அலிகான் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டு மந்தியைச் சாப்பிட்டனர்.
போட்டியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:-
உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வரும் நிலையில், தரமான அரிசி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை மக்களுக்கு வழங்குவது அவசியம். பாரம்பரிய சீரகச் சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தற்போது நடிகர் சசிகுமாருடன் ஒரு படத்திலும், சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், நடித்து வருகிறேன். எனது நடிப்பில் 4 முதல் 5 திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் வீரப்பனாக நடிக்க விருப்பம் இருக்கிறது.
மறைந்த விஜயகாந்தின் இடத்தை அவரது மகன்கள் சண்முக பாண்டியன், பிரபாகரன் ஆகியோர் நிரப்ப வாய்ப்புள்ளது. தமிழ் சினிமாவில் புதிய அதிரடி ஆக்சன் கதாநாயகர்கள் உருவாகலாம்.
தமிழக அரசின் செயல்பாடுகள் நன்றாக இருக்கின்றன. முதல்-அமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டபோது உடல்நலக்குறைவால் முறையாகப் பிரசாரம் செய்ய முடியாமல், பெரிய கட்சிகளுக்கு ஆதரவளித்தது எனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள 5 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, இந்த வாரம் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். மக்கள் ஆதரவுடன் கடுமையாக உழைத்து நிச்சயம் தேர்தல் களத்தில் இறங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.