பணமோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்

நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்கு குறித்து ‘உண்மை கூடிய விரைவில் வெளிவரும்’ என விளக்கமளித்திருக்கிறார்.
பணமோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்
Published on

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் நிவின் பாலி நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே நடித்து முடித்த ஏழு கடல் ஏழு மலை, டியர் ஸ்டூடன்ஸ் ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. மேலும், நடிகர் பகத் பாசில் தயாரிப்பில் 'பெத்லஹம் குடும்ப யூனிட்' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

2022ல் வெளியான 'மஹாவீர்யார்' படத்தின் தோல்வியால் ரூ.95 லட்சம் வழங்குவதுடன், அப்ரித் ஷைன் இயக்கும் 'ஆக்ஷன் ஹீரோ பிஜு பார்ட் 2' படத்தை தயாரிக்க வாய்ப்பு வழங்குவதாக நிவின் பாலி உறுதியளித்திருந்ததாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்திற்கு முதன்மை தயாரிப்பாளராக இருந்த இயக்குநர் அப்ரித் ஷைன், படத்தின் தயாரிப்பை பி.எஸ் ஷாம்னஸிடம் மாற்றிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் துபாய் விநியோக உரிமையை விற்றதில் நிவின் பாலி, ரூ.2 கோடி வரை பி.எஸ் ஷாம்னஸுக்குத் தெரியாமலே அட்வான்ஸாக வாங்கியிருப்பதாகவும், துபாய் உரிமத்தையும் அவரே வைத்திருப்பதாகவும் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்குத் தொடர்ந்திருக்கும் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ், நிவின் பாலி பணமோசடி செய்திருப்பதாகவும், தயாரிப்பாளரை ஏமாற்றி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் நடிகர் நிவின் பாலி, "இது தொடர்பான வழக்கு 28.06.2025 முதல் நீதிமன்ற நடுவர் குழு விசாரணையில் இருக்கிறது. இதில் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மதிக்காமல், அந்த வழக்கின்மேல் மேலும் ஒரு புதிய வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறோம். உண்மை கூடிய விரைவில் வெளிவரும்" என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிவின் பாலி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com