தவெக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு தெருநாய்களை உதாரணம் காட்டி பேசிய ராகவா லாரன்ஸ்

விஜய் மீது உள்ள பொறாமையால் எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு தெருநாய்களை உதாரணம் காட்டி பேசிய ராகவா லாரன்ஸ்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில், அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், “நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. அதுகுறித்து விரைவில் விளக்கம் அளிக்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். முதலில் ஜூன் 11-ம் தேதி தனது முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்த ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவை அடுத்து தனது அறிவிப்பை ஒரு நாள் தள்ளிவைத்தார். அதனைத்தொடர்ந்து 12-ம் தேதி, அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், “நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம். ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிப்பேன். என் ரசிகர்களாகிய உங்களை அழைத்து என் தாயை மேடை ஏற்றி முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்றார்.

மேலும் “தவெக அரசிற்கு ஒரு சில கால அவகாசம் கொடுக்க வேண்டும் நாம் ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்தோம் அது நடந்தது அதற்கு ஏற்றார் போல் ஒரு சில கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது ஓனர் சாவி கொடுத்து உள்ளே போகும் போது தான் தெரியும் வீட்டில் என்னென்ன பிரச்சனை உள்ளது என்பது. எங்கே தண்ணீர் பிரச்சனை எங்கே மற்ற பிரச்சனை உள்ளது என வீட்டிற்கு உள்ளே சென்றால் தான் தெரியும். வீட்டிற்கு அப்படி என்றால் நாம் நாட்டையே கொடுத்து உள்ளோம்.

அதே போல ஒரு ரோட்டில் புதிதாக ஒருவர் சென்றால் தெருநாய் கூட கத்தும். அப்படி கத்தும் தெரு நாய்க்கு பிஸ்கட் போட வேண்டும். ஒரு சில தெரு நாய் பிஸ்கட் சாப்பிடாது, பிரியாணி சாப்பிடும். அதற்கு பிடித்தது போல் சேர்த்து போட்டு அதை கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாய்க்கு இப்படி என்றால் நாம் நாட்டை கொடுத்து உள்ளோம் எனவே அதற்கான அவகாசம் கொடுப்போம். விஜய் மீதான பொறாமையில் எதிர்கட்சியில் உள்ளவர்கள் விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்கள். கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதற்கு பொறாமைதான் காரணம்” என்று ராகவா லாரன்ஸ் பேசினார். இந்த ஒப்பீடுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com