திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..?- நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவின.
ராகவா லாரன்ஸ்
Published on

சென்னை,

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், நடன இயக்குனராகவும் செயல்பட்டு வருபவர் ராகவா லாரன்ஸ்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்

இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, திருச்சி கிழக்கு உள்பட காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதேவேளை, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவின. இது குறித்து கடந்த சில நாட்களுக்குமுன் பேசிய ராகவா லாரன்ஸ், நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். நீங்கள் வாருங்கள் என அழைத்தது சந்தோஷம். ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

ராகவா லாரன்ஸ் விளக்கம்

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆசைக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டேன். நான் அரசியலுக்கு வரவில்லை என நினைக்க வேண்டாம். திருச்சி கிழக்கில்தான் போட்டியிடமாட்டேன் என்றேன்... வேறு எங்கும் போட்டியிடமாட்டேன் என்று கூறவில்லை.

என்னை பல பேர் அரசியலுக்கு அழைத்தார்கள். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட போறேன் என்று தகவல் பரவிய உடன் ``அண்ணா நீங்க வாங்க அண்ணா.. ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம்’’ என்று நிறையபேர் வாழ்த்தினார்கள். நான் ஷூட்டிங் போகும் இடத்தில், அலுவலகத்தில் ``வாங்க எம்.எல்.ஏ. சார்.. திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட போகிறீர்களாமே?’’ என்று கேட்டார்கள். அனைவரது அன்புக்கும் நன்றி. ஆனால் தர்மம் என்று ஒன்னு உள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களுக்குத்தான் முதலில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்’’

திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவேண்டுமா? விஜய் சார் ஹீரோ ஆனதில் இருந்து போஸ்டர் ஒட்டிய ஒருவர் போட்டியிடவேண்டுமா? இல்லை கட்சி தொடங்கியதில் இருந்து உழைத்தவர்கள் நிற்க வேண்டுமா? அதிஅ விஜய் சார் முடிவு செய்வார்.

யாரோ ஒருவர் விதை போட்டு செடிக்கு தண்ணி ஊற்றி மரம் வளர்ந்து பழம் வருது.. அந்த பழத்தை நான் சாப்பிடலாமா? கட்சியில் உறுப்பினரா சேர்ந்து, 4 ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதன்பின்னர் தலைமை பாத்து சீட் கொடுத்தால் அந்த பதவியில் அமர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்... அதுதான் தர்மம்’ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com