எம்.ஜி.ஆர். குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு ராஜேந்திர பிரசாத் வீடியோ வெளியீடு

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், கத்திச்சண்டை போடுவதில் காந்தாரா வல்லவர் என்றும், எம்.ஜி.ஆர் அவரை பார்த்து பயப்படுவார் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியது.
எம்.ஜி.ஆர். குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு ராஜேந்திர பிரசாத் வீடியோ வெளியீடு
Published on

தெலுங்குத் திரையுலதில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குணச்சித்திர நடிகரான ராஜேந்திர பிரசாத் மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகரான காந்தாராவ் பற்றி புகழ்ந்து பேசினார். தெலுங்கு சினிமாவில் காந்தாராவின் பங்களிப்பு பற்றிப் பேசிய ராஜேந்திர பிரசாத், அவர் திரையில் கத்திச்சண்டை போடுவதில் வல்லவர் என்றும், அவரைப் பார்த்தால் தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர். கூட பயப்படுவார் என்று மேலும் சில கருத்துக்களை அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராஜேந்திர பிரசாத் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும் தமிழ்த் திரையுலகினரும் அவர் பேசியதற்கு கண்டனங்களைத் தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் ராஜேந்திர பிரசாதிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு ராஜேந்திர பிரசாத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இரண்டு நாள்களுக்கு முன் தெலுங்குத் திரையுலகில் நடந்த விழா ஒன்றில் பழைய நடிகர் காந்தாராவ் பெயரில் எனக்கு விருது வழங்கினர். அந்த விழாவில், தமிழ் சினிமாவின் கடவுள் போன்ற எம்ஜிஆர் சார் பற்றி விளையாட்டாக தவறான வார்த்தைகளை பேசிவிட்டேன். அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்திவிட்டனர்.

அவரைப் பற்றி தவறாக நான் பேசுமளவிற்கு எனக்குத் தைரியம் இல்லை. நான் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்-ல் படிக்கும்போது எம்ஜிஆர்தான் முதல்வர். அவரைத் தவறாகச் சொல்லும் எண்ணம் எனக்கில்லை. நான் வாய்தவறிப் பேசியதில் யாரேனும் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். என் வாழ்க்கையில் நான் இனி எப்போதும் அதுபோன்று பேசமாட்டேன். என் தவறை இந்த முறை மன்னித்துக் கொள்ளுங்கள். இத்துடன் இதனை விட்டுவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com