

மைசூரு,
‘தர்மன்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தததை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், ‘தர்மன்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் மைசூரு சாமுண்டி மலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இதற்கிடையே ரஜினிகாந்த் வந்துள்ள செய்தி காட்டுத்தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக பக்தர்கள், ரசிகர்கள், உள்ளூர் வாசிகள் மற்றும் வியாபாரிகள் கோவில் வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் கடும் நெரிசல் ஏற்பட்டது. பூஜை முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த், திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து புன்னகைத்தபடியே கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்தின் வருகையையொட்டி சாமுண்டி மலை கோவில் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு படை போலீசார் அவரை சுற்றி வளைத்து பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்து சென்று, தரிசனம் முடிந்ததும் வழி அனுப்பி வைத்தனர்.