

சென்னை,
வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்றது, தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது என்ற இரட்டை சந்தோஷத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 28-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தலைவலி மற்றும் லேசான மயக்கம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் உடல் முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் சிறிய அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அதை நீக்குவதற்கான முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை சிகிச்சை மூலம் அடைப்பு சரிசெய்யப்பட்டது.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கும் அவரை, அவரது மனைவி லதா மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே, அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ்' செய்வது குறித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை டாக்டர்கள் முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று இரவே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
ரசிகர்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இன்றே ரஜினிகாந்த் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.