

மும்பை,
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இப்படத்தின் புதிய போஸ்டரில், தீப்பற்றி எரியும் சிதைந்த சரக்கு விமானத்தின் முன்பகுதியில் ஷாருக்கான் கையில் துப்பாக்கியுடன் கம்பீரமாக நிற்கிறார். வாயில் ரோஜா மலரை வைத்திருக்கும் அவரது தோற்றம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தப் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷாருக்கான், “மீண்டும் நினைவுக்கு வந்தது... கொலைகாரன் அல்ல... காதலன்” என்ற பொருள்படும் வாசகத்தைப் பதிவிட்டுள்ளார். இது அவரது ‘பாதுஷா’ படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல் வரியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கெனவே வெளியான ‘கிங்’ படத்தின் அறிமுக வீடியோவில், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் ஷாருக்கானின் தீவிரமான தோற்றம் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டர், அவரது கதாபாத்திரத்தில் அதிரடியும் காதலும் கலந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீண்டும் இணைந்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படாது என்றும் ஷாருக்கான் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார். புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், ‘கிங்’ திரைப்படத்தைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.