ஜவான் ரிலீசுக்கு முன் திருப்பதி கோவிலில் மகளுடன் நடிகர் ஷாருக் கான் சாமி தரிசனம்

ஜவான் பட ரிலீசுக்கு முன் வேட்டி அணிந்தபடி நடிகர் ஷாருக் கான் தனது மகளுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
ஜவான் ரிலீசுக்கு முன் திருப்பதி கோவிலில் மகளுடன் நடிகர் ஷாருக் கான் சாமி தரிசனம்
Published on

புதுடெல்லி,

அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக் கான் நடித்த ஜவான் படம் வருகிற 7-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு, நடிகர் ஷாருக் கான் வேட்டி, சட்டை அணிந்தபடி தனது மகளுடன் திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அவர்களுடன் நடிகை நயன்தாரா, அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் பதான் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு நடிகர் ஷாருக் கான் சாமி தரிசனம் செய்ய சென்றார். நீல நிற ஆடையில், முகம் முழுவதும் மறைக்கும்படி ஆடையணிந்து சென்ற அவருடன், கோவில் அதிகாரிகள், சில போலீசார் மற்றும் ஷாருக் கானின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோருடன் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்த பதான் படம், முதலில் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. ஆனால், அதுவே வெற்றிக்கு உதவியாகவும் அமைந்தது.

உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு கூடுதலாக வசூல் செய்து சாதனை படைத்தது. 4 ஆண்டு இடைவெளிக்கு பின்பு வெளிவந்த பதான் படம் 20-க்கும் மேற்பட்ட சாதனைகளையும் படைத்து இருந்தது. இதனை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்விக்க ஜவான் படம் தயாராகி வருகிறது. பான் இந்தியாவாக படம் உருவாகி ஒரு சில நாட்களில் திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது.

இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பல்வேறு வேடங்களை ஏற்றுள்ளனர். நயன்தாரா நாயகியாக நடிக்கும் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லன் வேடம் ஏற்றுள்ளார். தவிரவும், யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். பாலிவுட்டில் அவருக்கு இது அறிமுக படம். படம் பற்றிய புதிய போஸ்டர்களை தனது இன்ஸ்டாவில் நடிகர் ஷாருக் கான் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

சமீபத்தில், ஆடியோ வெளியீட்டுக்காக நடிகர் ஷாருக் கான் சென்னைக்கு வந்து சென்றார். பின்னர், பட விளம்பர பணிகளுக்காக அவர் துபாய் சென்றார். ஜவான் படம் தவிர்த்து, டுங்கி படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் நடிகை டாப்சி பன்னு நடித்து வருகிறார். படம் இந்த ஆண்டில் வெளிவர திட்டமிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com