மிக்ஜம் புயல் பாதிப்பு: அம்மன் உணவகம் சார்பில் நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி

நடிகர் சூரி தனது மதுரை அம்மன் உணவகம் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
மிக்ஜம் புயல் பாதிப்பு: அம்மன் உணவகம் சார்பில் நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது மதுரை அம்மன் உணவகம் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதியை இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 'தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு தனது ஒரு மாத சம்பளத் தொகையான ரூ.1.05 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சரிடம் வழங்கினார். மேலும் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர்கள் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com