“பாலன் தி பாய்” படக்குழுவை பாராட்டிய நடிகர் சூர்யா

சிதம்பரம் இயக்கியுள்ள “பாலன் தி பாய்’ படம் கடந்த ஜூன் 19 வெளியானது.
“பாலன் தி பாய்” படக்குழுவை பாராட்டிய நடிகர் சூர்யா
Published on

நடிகர் சூர்யா ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தை பார்த்தபின் பாராட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

‘ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது.

இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். படத்திற்கு சுஷின் ஷியான் இசையமைக்க, சிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

‘பாலன்’ என்பது மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படத்தின் (1938) பெயரும் ஆகும். விகதகுமாரன் மற்றும் மார்த்தாண்ட வர்மா ஆகியவற்றிற்கு பின் மலையாளத்தில் வெளிவந்த மூன்றாவது படம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கூடுதல் டிக்கெட்கள் விற்பனையாகி வருவதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தை பார்த்தபின் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலன் படத்தை பார்த்து விட்டு என்னால் அதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு இப்படி ஒரு படத்தை உருவாக்கி சிதம்பரமும் அவரின் குழுவும் யார் என்பதை காட்டியுள்ளனர். படத்தில் நடிப்பு, இயக்கம், கதை, ஒளிப்பதிவு, இசை என அனைத்துமே சிறப்பாக உள்ளது. இந்த புதுமுக நடிகர்களை பார்க்கும்போது, என் நடிப்பை இன்னும் மெருகேற்ற வேண்டுமோ என தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

நடிகை ஜோதிகாவும் இப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். தற்போது, சூர்யா இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com