நடிகர் சூர்யாவின் 'கருப்பு படம்' இன்று வெளியாகிறது!

கருப்பு' படம் ரிலீசாகாத விரக்தியில் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.
நடிகர் சூர்யாவின் 'கருப்பு படம்' இன்று வெளியாகிறது!
Published on

சென்னை,

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-திரிஷா நடித்த 'கருப்பு' திரைப்படம், படப்பிடிப்பு முடிவடைந்த போதிலும் ரிலீசாகாமல் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பின்னர் கடும் போராட்டத்திற்கு இடையே ஒரு வழியாக மே 14-ந்தேதி (நேற்று) படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் கடந்த மாதம் அறிவித்திருந்தனர்.

இதையொட்டி பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதற்கிடையில் நேற்று முன்தினமே மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும் திட்டமிட்டபடி படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் உறுதி பட தெரிவித்து இருந்தனர்.

உலகம் முழுவதும் 'கருப்பு' திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படம் நேற்று ரிலீஸ் ஆகவில்லை. காலை 9 மணி சிறப்பு காட்சி தொடங்கி அடுத்தடுத்து ஒவ்வொரு காட்சியாக ரத்தானது. அந்த வகையில் நேற்று முழுவதும் 'கருப்பு' திரைப்படம் ரிலீஸ் ஆகவே இல்லை.

சூர்யாவின் படத்தை கொண்டாடி தீர்க்கலாம் என்று கருப்பு சட்டை அணிந்து நேற்று காலை முதலே ஆர்வமாக தியேட்டரை நோக்கி படையெடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்

இதற்கிடையில் ‘கருப்பு' படம் ரிலீசாகாத விரக்தியில் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து படத்தின் நிதி சிக்கலை களையும் வகையில் பட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டனர். நடிகர் சூர்யா தரப்பிலும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் போஸ்டரை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிறப்பு காட்சியுடன் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் வெளியாகிறது. வடமாநிலங்களின் ஒருசில இடங்களில் திட்டமிட்டபடி கருப்பு படம் நேற்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com