நடிகரிலிருந்து அரசியல்வாதியாகும் சேத்தன் அகிம்சா.. ஜனவரியில் புதிய கட்சி

பிரபல கன்னட நடிகர் சேத்தன் அகிம்சாவும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

நடிகரிலிருந்து அரசியல்வாதியாகும் சேத்தன் அகிம்சா.. ஜனவரியில் புதிய கட்சி
Published on

பெங்களூரு,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆகி உள்ளார். இது பல நடிகர், நடிகைகளுக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டி உள்ளது. தமிழகத்தை கடந்து அண்டை மாநிலங்களிலும் உள்ள நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய அரசியல் கட்சியை தொடங்கும் சேத்தன் அகிம்சா

அந்த வரிசையில் தற்போது கர்நாடகத்தில் பிரபல கன்னட நடிகர் சேத்தன் அகிம்சாவும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் சேத்தன் அகிம்சா கூறுகையில், 'நான் கர்நாடகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதத்துக்குள் புதிய கட்சி தொடங்கப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளேன் என்றார்.

என்னை போன்றவர்கள் இதில் இணையலாம்

இந்துத்துவா அரசியல் மற்றும் கர்நாடகத்தின் தற்போதைய அரசியலை மாற்ற நினைக்கும் என்னை போன்றவர்கள் இதில் இணையலாம். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் தனிப்பட்ட லாபத்துக்காக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினால் மட்டுமே, மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும்' என்றார்.

சேத்தன் கன்னடத்தில் 'ஏ தினகலு', 'பிருகாளி', 'சூர்யகாந்தி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக ஆர்வலராகவும் உள்ளார். சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு நினைவிடம் அமைக்க அரசு நிலம் ஒதுக்கியதை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com