அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஜய் தேவரகொண்டா - காரணம் என்ன?

விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்,
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, பிரகஷ் ராஜ், ரானா டகுபதி உள்ளிட்ட நடிகர்கள், சமூகவலைதள பிரபலங்கள் உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பலருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த வகையில், விசாரணைக்கு 6ம் தேதி (இன்று) ஆஜராகும்படி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார்.
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக இதே வழக்கில் கடந்த 30ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.






