

சென்னை,
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில சிக்கல்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த 'அந்தகன்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், பிரசாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 'அந்தகன்' படத்தின் 'அந்தகன் ஆந்தெம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார்.
உமாதேவி, ஏகாதசி எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'கோட்' திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.