தனது செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்ட நடிகர் விக்ரம்

ஆனந்த் சங்கர் இயக்கும் ‘சியான் 63’ படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
தனது செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்ட நடிகர் விக்ரம்
Published on

நடிகர் விக்ரம் குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சியான் விக்ரம். சினிமா வாய்ப்பு தேடி அலைந்த விக்ரம். ‘என் காதல் கண்மணி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம் போன்ற படங்களில் நடித்துவந்த விக்ரமிற்கு ஒரு அடையாளத்தை தந்த படம் தான் ‘மீரா’ இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் விக்ரம் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.

விக்ரமின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது பாலா இயக்கிய ‘சேது’ திரைப்படம். அந்த படம், விக்ரமின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுடன் "சியான்" என்ற பெயரையும் ரசிகர்களிடையே நிலைநிறுத்தியது. அதன்பிறகு பல விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்த விக்ரம், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக பல்வேறு பரிமாணங்களில் நடிக்கக்கூடிய நடிகராக கருதப்படுகிறார். ஒருகாலத்தில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்திருந்த விக்ரம், இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பும் நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் அபரிமிதமான காதல்தான். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

‘இருமுகன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ‘சியான் 63’ என குறிப்பிடப்படும் இப்படத்தில் தயாரிப்பாளரும், நடிகையுமான ரியா ஷிபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.முழு நீள ஆக்சன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இப்படத்திற்கான கெட்-அப்பில் விக்ரம் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகின.

இந்நிலையில், தனது செல்லப் பிராணி குரங்குடன் விளையாடும் வீடியோவை விக்ரம் பதிவிட்டுள்ளார். குரங்கிடம் பேசிக்கொண்டு அதைப் போன்றே பாவனைகள் செய்யும் அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு முன்னதாக தனது வீட்டில் வளர்க்கும் கிளியுடன் பேசும் விடியோவை விக்ரம் பகிர்ந்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com