'புருஷன்' படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காயம்

'புருஷன்' படப்பிடிப்பின் சண்டைக் காட்சியின்போது, நடிகர் விஷாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது

'புருஷன்' படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காயம்
Published on

சென்னை,

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ படப்பிடிப்பின் போது, நடிகர் விஷாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மகுடம்’. இந்தப் படத்தை விஷாலே இயக்கி நடித்திருந்தார். இதில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது.

சுந்தர்.சி இயக்கத்தில் ‘புருஷன்’

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘புருஷன்’ என்ற கமர்ஷியல் படத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’, ‘ஆக்சன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆக்சன் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆம்பள’ படத்துக்குப் பிறகு மீண்டும் சுந்தர்.சி படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசரும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதையடுத்து படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

சண்டைக்காட்சியில் காயம்

இந்த நிலையில், படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது நடிகர் விஷாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விஷாலின் காயம் குறித்தும், அவர் மீண்டும் எப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறித்தும் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com