சமூக வலைதளங்களில் அவதூறு: பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை

பயில்வான் ரங்கநாதன் உள்பட பலர், எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் அவதூறு: பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
Published on

சென்னை,

சமூக வலைதளங்களில் தங்களது உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மீது அவதூறு பரப்புவோர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்த தென்னிந்திய நடிகர் சங்கம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும் பல தவறான பொய்யான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என்று குற்றம்சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து கோர்ட்டில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்ற கோர்ட்டு, அந்த உறுதி மொழியில் இருந்து அவர் சற்றும் தவறக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில், அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து சற்று காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில், சமீபகாலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் உள்பட பலர், எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர். அவ்விதம் அவதூறு பரப்புபவர்கள் வழக்கை மனதில் கொண்டு உடனடியாக அவர்களது இந்த சட்ட விரோத செயலை நிறுத்த வேண்டும்.

அவ்விதம் நிறுத்த தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த முறையை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலமாக தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துகளை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com