

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகர்கள் கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
நேற்று (ஜூலை 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது. ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தியபோது காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தி பின்னர் இருதரப்புக்கும் மோதல் ஏற்படவே காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கண்ணீர் புகை குண்டு மற்றும் லத்திகளால் தாக்கப்பட்டதால் பலர் காயமடைந்தனர். இருப்பினும், சிஜேபியினர் உறுதியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தின் பதிவில் “சில நேரங்களில், நாம் நம் சொந்த வாழ்க்கையில் மூழ்கிப்போய், மேலோட்டமான தகவல்களைக் கேட்டு, பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும் என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், சமீபத்தில் நாம் கண்ட காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பரவி வரும் காணொளிகள் மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.
நம் சமூகம் இன்னும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை அவை காட்டுகின்றன. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீதான வன்முறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களே நமக்குத் தீங்கு விளைவித்தால், நாம் யாரிடம் செல்வது?
அடுத்த தலைமுறையினருக்காகக் கல்வி முறையை மேம்படுத்த ஒரு பேச்சுவார்த்தையை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள். யாருமே குரல் கொடுக்காத நிலையில், தமக்காகத் தாங்களே குரல் கொடுக்கும் நம் நாட்டின் இளைஞர்களுடன் நான் துணை நிற்கிறேன். உயிர்கள் பறிபோவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; நடப்பவை எதுவும் சரியல்ல! நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; சில நேரங்களில் மௌனம் பலனளிக்காது, நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. தாமதமாகக் குரல் கொடுப்பதற்கு வருந்துகிறேன். நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; ஆனால் இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு டொவினோ தாமஸ் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சரி, தவறு என்பவை சில நேரங்களில் மாறுபடக்கூடியவையாக இருக்கலாம். ஆனால், ஒரு அமைதியான போராட்டத்தை கையாளும் முறை இது அல்ல. நாட்டின் எதிர்கால தலைமுறையினர் தங்கள் குரலை உயர்த்தும் போது, அந்தக் குரல்களுக்கு அடக்குமுறை சக்தியால் பதில் அளிக்கப்பட்டால், மிதிக்கப்படுவது எதிர்காலம்தான். இதனால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே சிதைந்து போகிறது.
இந்த மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்? சொத்துகளைச் சேதப்படுத்தினார்களா? வன்முறையில் ஈடுபட்டார்களா? இதைப்போன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் தகுதியானவர்கள் எனச் சொல்லும் அளவிற்கு அவர்கள் செய்தது என்ன?
நமது நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொரு நபருக்கும் என் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் உரிமை என்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல; மாறாக அது ஜனநாயகத்தின் அடித்தளங்களில் ஒன்றாகும். எனது தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்பப் போகிறவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன்; உங்களை விட என்னை நான் நன்றாக அறிவேன். இது அரசியலைத் தாண்டியது; மதம் மற்றும் அனைத்து விதமான பிரிவினைகளையும் தாண்டியது. எனது அரசியல் மனிதநேயம். எனது நம்பிக்கை அமைதி” என தெரிவித்துள்ளார்.