பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் அஞ்சலி

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
பாரதிராஜா உடலுக்கு  நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் அஞ்சலி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 84-வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ் சினிமாவை மாற்றிய இயக்குநர்

1977-ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கினார். தொடர்ந்து 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'முதல் மரியாதை' உள்ளிட்ட பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளார்.

இயக்குநராக 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், தனது சிறப்பான படைப்புகளுக்காக 6 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் விளங்கிய பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஞ்சலி செலுத்திய சிவக்குமார் - சூர்யா

பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகனும் நடிகருமான சூர்யா, மருமகள் ஜோதிகா ஆகியோர் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தங்களது இரங்கலைப் பகிர்ந்து கொண்டனர். பாரதிராஜாவின் மறைவால் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, ரசிகர்களும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com