துல்கர் சல்மானுடன் நடித்த படத்தால் கிண்டலுக்கு ஆளானேன் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

ட்ரோல் செய்யப்பட்டதால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விலகியது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மானுடன் நடித்த படத்தால்  கிண்டலுக்கு ஆளானேன் -  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
Published on

நடிகர் துல்கர் சல்மானுடன் தொடர்ந்து இணைந்து நடிக்காதது குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியுள்ளார்.

மலையாள நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு முன்பாக அவர் நடித்த ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை’ உள்ளிட்ட திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தொடர்ந்து, கேப்டன், கட்டா குஸ்தி, அம்மு குமாரி உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன. 2025ல் ‘தக் லைப்’ படத்தில் இவர் நடித்திருந்தார். இவர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்த ‘மாமன்’ படமும் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படமும் திரையரங்குகளில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

கிண்டலுக்கு ஆளான ‘கிங் ஆஃப் கொத்தா’ படம்

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானை நான் 'ராஜுவேட்டா' என்றே அழைப்பேன். ஆனால், ரசிகர்களிடம் அது கேலி, கிண்டலாக மாறியது. முக்கியமாக, ‘ஹலோ மம்மி’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அப்படத்தின் உதவி இயக்குநர் என்னை ராஜுவேட்டா என அழைத்துக் கிண்டல் செய்தார். இந்த எதிர்மறையான விமர்சனங்கள் என்னை மனதளவில் பாதித்தது.

‘கிங் ஆஃப் கொத்தா’ படம் வெளிவாகும் முன்பு அதன்மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்தப் படம் வெளியான பின்னர், என்னுடைய சினிமா பயணமே பாதிக்கப்பட்டது. இப்போது நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம். அந்தப் படத்துக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்பு கொடுக்க்கூட பலரும் பயந்தனர். அந்த அளவுக்கு அப்படம் ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பாதிப்பு எனக்கு மட்டுமல்ல, துல்கர் சல்மான்கூட ட்ரோல் செய்யப்பட்டார், மொத்த படமும் கிண்டல் செய்யப்பட்டது.

இதனால், இனிமேல் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க மறுத்துவிடலாம் என நினைத்தேன். அதேபோல், அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும்போதெல்லாம் மறுத்தும் வருகிறேன். ஓணம் பண்டிகைக்காக ஒரு விளம்பரப் படத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், மீண்டும் ஏதாவது கேலி, கிண்டல்கள் நிகழ்ந்து என்னால் அந்த விளம்பரப்படமும் பாதிப்பைச் சந்திக்கக்கூடாது என அதனையும் மறுத்துவிட்டேன்

ஒரு படத்தில் நடந்த தவறு சரியாகும்வரை, சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது. மேலும், இப்போதெல்லாம் ட்ரோல் என்பது எல்லையற்றதாக, இரக்கமற்றதாக இருக்கிறது. மேலும் துல்கருடன் நடிக்க மாட்டேன் எனச் சொன்னது, அவர் மீதான தனிப்பட்ட பிரச்னை அல்ல. ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்திற்குப் பிறகு ஏற்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கமே இதற்குக் காரணம் ” என தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான ‘ஆஷா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com