

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது சமீபத்தில் இவர் நடித்த வட சென்னை, கனா படங்களுக்காக அறிவிக்கப்பட்டது. பரத் தர்ஷன் இயக்கும் ‘ஓ...!சுகுமாரி’ படத்தில் தற்போது இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் “நான் மிகவும் இளம் வயதில் எனது சகோதரனுடன் ஆடிஷனுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த புகைப்படக் கலைஞர் எனது சகோதரனை வெளியே அமர வைத்து, என்னை அறையினுள் அழைத்தார். என்னிடம் பிகினி உடையைக் கொடுத்து, ‘உனது உடலைப் பார்க்க வேண்டும், அணிந்து வா’ எனக் கூறினார். அந்த சமயத்தில் எனக்கு சினிமா துறையைப் பற்றின புரிதல் பெரிதாக இல்லை. அப்படித்தான் வாழ்க்கை சென்றது.நானும் ஓரளவுக்கு சமாதானம் ஆகிவிட்டேன்; ஆனாலும் இல்லை. அவர் இன்னும் கூடுதலாக 2 நிமிஷங்கள் தொடர்ந்திருந்தால், நானும் செய்திருப்பேன்.
எனக்கு ஏதோ தவறாகப் பட்டதால், எனது சகோதரின் அனுமதி கேட்க வேண்டுமென அறையிலிருந்து வெளியேறிவிட்டேன். எவ்வளவு பெண்களை அவன் இந்தமாதிரி செய்தான் எனத் தெரியவில்லை? எனது சகோதரரிடம் சொல்லுமளவுக்கு எனக்கு அப்போது தைரியமில்லை. ஒருமுறை நான் தாமதமாக வந்தேன் என்பதற்காக துணை நடிகர்கள் முன்பாக இயக்குநர் என்னை வேண்டுமென்றே திட்டினார். பல நடிகைகளுடன் ஒப்பிட்டும் பேசினார். தவறே செய்தாலும், யாரையும் இந்த மாதிரி அசிங்கப்படுத்தக் கூடாது” என கூறியுள்ளார்.