வலைத்தளத்தில் அவதூறு - “புஷ்பா” பட நடிகை போலீசில் புகார்

பிரபல தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ், ரங்கஸ்தலம், புஷ்பா, புஷ்பா 2, மைக்கேல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் தற்போது திரைப்படங்களிலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கிறார். இருப்பினும் இடையிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சமூக ஊடகங்களில் அவர் அடிக்கடி, தனது திரைப்பட அப்டேட்டுகள் மற்றும் தனிப்பட்ட விடியங்களைப் பகிர்ந்து கொள்வார். இவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். இவர் ரங்கஸ்தலம், புஷ்பா 2, மைக்கேல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை அனசுயா பரத்வாஜ் சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், சிலர் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்துப் பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்கிப் பரப்புவதாகவும், தனது புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்வதும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சைபர் கிரைம் போலீஸார், 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






