

நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிகர் துருவ் விக்ரமுடனான காதல் முறிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குத் தனது பாணியில் நேரடியாகப் பதிலளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு வந்த அனுபமா பரமேஸ்வரன், சுதந்திரம், மன அமைதி மற்றும் ‘என்னை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்’ போன்ற வரிகளுடன் உணர்ச்சிப்பூர்வமான பல பதிவுகளைப் பகிர்ந்திருந்தார்.
குறிப்பாக,“யாரோ ஒருவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது தலைப்பிற்காகவோ காத்திருக்கத் தேவையில்லை என்பதை உணரும்போதுதான் சமூக வலைத்தளம் மகிழ்ச்சியாக மாறுகிறது” என குறிப்பிட்டிருந்தார். இப்பதிவுகள், மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த துருவ் விக்ரமுடனான காதல் முறிவை மறைமுகமாக உணர்த்துவதாக ரசிகர்களிடையே வதந்திகள் வேகமாகப் பரவின.
தனது புதிய தெலுங்குத் திரைப்படமான ‘கிரேஸி கல்யாணம்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அனுபமாவிடம், இந்தச் சர்ச்சை பதிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “இது எனது சொந்த சோஷியல் மீடியா கணக்கு. அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் யாருக்கும் எதிராகக் கோபத்தையோ, ஆதங்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் கடந்து வந்த பாதையையும்தான் நான் பகிர்ந்துகொண்டேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எனவே, மக்கள் எதையும் யூகிக்கத் தேவையில்லை. அது என் இன்ஸ்டாகிராம், எனக்கு விருப்பமானதை நான் பதிவிடுகிறேன்” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
‘பைசன்’ படப்பிடிப்பின் போது அனுபமாவும் துருவ் விக்ரமும் காதலித்து வருவதாக இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும், இருவரும் தங்களது உறவு குறித்து எப்போதுமே அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. தற்போது அனுபமா அளித்துள்ள இந்தத் தெளிவான விளக்கம், சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.