கேரளாவில் நடந்தது நடிகை பாவனா திருமணம்

நடிகை பாவனா திருமணம் கேரளாவில் நேற்று நடந்தது. #Kerala #Bhavana
கேரளாவில் நடந்தது நடிகை பாவனா திருமணம்
Published on

திருச்சூர்,

நடிகை பாவனா திருமணம் கேரளாவில் நேற்று நடந்தது. கன்னட பட அதிபரை அவர் மணந்தார்.

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா. இவர் 2006-ல் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். வெயில், ரமேஸ்வரம், ஜெயம் கொண்டான், தீபாவளி, ஆர்யா, வாழ்த்துக்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட 4 மொழிகளிலும் 75-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

ரோமியோ என்ற கன்னட படத்தில் நடித்தபோது அந்த படத்தை தயாரித்த நவீன் என்பவருக்கும் பாவனாவுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் 4 வருடங்களாக காதலித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா சில நாட்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மலையாள நடிகர்-நடிகைகள் வற்புறுத்தியதால் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பிரிதிவிராஜுடன், ஆடம் மற்றும் ஹனிபீ-2 ஆகிய இரண்டு மலையாள படங்களில் நடித்தார். பாவனா-நவீன் திருமணம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி நிலவி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்தது.

நேற்று பாவனாவும் நவீனும் திருமணம் செய்து கொண்டார்கள். கேரள மாநிலம் திருச்சூரில் இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் மலையாள நடிகர் நடிகைகள் சிலரும் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிக்க பாவனா முடிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com