

சென்னை,
டி.வி. நடிகை சித்ரா கடந்த மாதம் 9-ந்தேதி பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சித்ராவுக்கு ஹேம்நாத்துடன் பதிவு திருமணம் நடந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை முடிவடைந்தநிலையில் சித்ரா தற்கொலையில் இதுவரை மர்மம் விலகாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கும் சித்ராவுக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என ஹேம்நாத் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார். பின், மனுவுக்கு ஜனவரி 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.