கமல்ஹாசன் படங்களில் “எனக்கு சம்பள பாக்கி இருப்பதற்கு ஆதாரம் உள்ளது” நடிகை கவுதமி மீண்டும் புகார்

கமல்ஹாசன் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கிக்கு ஆதாரம் உள்ளது என்று மீண்டும் கவுதமி தெரிவித்து உள்ளார்.
கமல்ஹாசன் படங்களில் “எனக்கு சம்பள பாக்கி இருப்பதற்கு ஆதாரம் உள்ளது” நடிகை கவுதமி மீண்டும் புகார்
Published on

நடிகர் கமல்ஹாசன் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்குரிய சம்பளத்தை தனக்கு தராமல் பாக்கி வைத்து இருப்பதாகவும் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார். பல தடவை கேட்டுப்பார்த்தும் சம்பள பாக்கியை தரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு கமல்ஹாசன் பட நிறுவனம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய படங்களுக்கு கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், விஸ்வரூபம் படத்துக்கான முழு சம்பளமும் அவருக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றும், தசாவதாரம் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கிக்கு ஆதாரம் உள்ளது என்று மீண்டும் கவுதமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

நான் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவதாக செய்திகள் வருகிறது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு உள்ளது. கமல்ஹாசனுடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ எந்த தொடர்பும் இல்லை. இதனை மீண்டும் மீண்டும் நான் சொல்லி வருகிறேன். யாரிடம் இருந்தும் எதுவும் எனக்கு தேவை இல்லை.

ஆனால் நான் உழைத்த படங்களில் இருந்து வர வேண்டிய ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. சம்பள பாக்கியை கேட்டதற்காக தவறாக பேசுகிறார்கள். இதனால் மனவேதனையில் இருக்கிறேன். எனக்காகவும், எனது மகளுக்காகவும் நான் இப்போது உழைத்து வருகிறேன். மகளின் எதிர்காலம் மட்டும்தான் இப்போது என் மனதில் இருக்கிறது.

வாழ்க்கையில் மோசமான நிலைமைகள் ஏற்படுவது சகஜமானது. அதில் இருந்து மீள்வதும், நல்ல ஒளிமயமான வாழ்க்கையை நோக்கி செல்வதும்தான் இப்போதைய எங்கள் நோக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் போல் சகஜமாக வாழ ஆசையாக இருக்கிறேன். புதிய உத்வேகத்தோடு எனது பணிகளை செய்துகொண்டு இருக்கிறேன்.

எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஆதாரம் இல்லாமல் கருத்துகளை சொல்வது இல்லை. ஆதாராம் இல்லாமல் பேசவும் மாட்டேன்.

இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com