புகை பிடிக்கும் படம்: நடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார்

நடிகை ஹன்சிகா மீது இந்து மக்கள் முன்னணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகை பிடிக்கும் படம்: நடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார்
Published on

நடிகை ஹன்சிகா மஹா என்ற படத்தில் புகை பிடிக்கும் தோற்றத்தில் நடிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை, காவி உடையில் ஹன்சிகா கஞ்சா அடிக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது.

இதை எதிர்த்து ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குனர் ஜமீல் ஆகியோர் மீது பா.ம.க பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

இதைப்போல இந்து மக்கள் முன்னணி சார்பிலும் அதன் நிறுவன அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் ஹன்சிகா மீது நேற்று புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சமீப காலமாக சினிமா துறையில் இந்து மத கடவுள் மற்றும் இந்து துறவிகளை விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்து மதத்தில் குற்றங்கள் நடப்பதுபோல் சித்தரிக்கின்றனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை முழுவதும் மஹா படத்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

அதில் ஹன்சிகா துறவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற காட்சி உள்ளது. இது இந்து மதத்தில் உள்ள பெண் துறவிகளை அவமதிப்பதுபோல் உள்ளது. இந்து மதம் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் காட்சி அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும் போஸ் கொடுத்த ஹன்சிகா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com