

கோவா,
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுபவர்களின் பெயர்களை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் கடந்த 18-ந் தேதி அறிவித்தார்.
அதில் பிரபல நடிகையும், தற்போது உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியின் எம்.பி.யுமான ஹேமமாலினி மற்றும் சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகிய 2 பேருக்கும் இந்த விருதை மத்திய மந்திரி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கோவாவில் இன்று 52-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இன்று தொடங்கி வரும் 28-ந் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் இந்திய திரைப்படங்கள் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
இதன் தொடக்க விழாவில் நடிகை ஹேமமாலினி, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி இருவரும் இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், இயக்குனர் கரண் ஜோகர், நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1963-ம் ஆண்டு வெளியான இது சத்தியம் எனும் தமிழ் படம் மூலம் நடன கலைஞராக அறிமுகமான நடிகை ஹேமமாலினி, 1968-ம் ஆண்டு இந்தியில் வெளியான சப்னோ கா செளதாகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தர்மேந்திரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னனி பாலிவுட் நடிகர்களுடன் பல படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது 75 வயதாகும் நடிகை ஹேமமாலினிக்கு இந்திய அரசு சார்பாக இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட்டதையடுத்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஹேமமாலினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.