

புனே,
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இந்தி திரையுலகம் மற்றும் மும்பை போலீசார் விசாரணை நடத்தும் விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் கடும் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய அவர், சினிமாவில் வரும் மாபியாவை விட மும்பை போலீசாரை பார்த்து பயப்படுவதாகவும் தாக்கி பேசினார்.
இந்நிலையில், நடிகை கங்கனாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை நீதிமன்றம் ஒன்றில் சாஹில் அஷ்ரப் அலி சையது என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதில், கங்கனா பிரபல நடிகை. அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதனால் அவரது டுவிட்டர் பதிவுகள் பலருக்கும் சென்று சேரும்.
நடிகை கங்கனா, பாலிவுட் படங்களில் பணியாற்றும் நபர்களை போதை அடிமைகள், சமூகவெறி கொண்ட நபர்கள், கொலைகாரர்கள் என சித்தரித்து வருகிறார். இந்து மற்றும் முஸ்லிம் கலைஞர்களுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறார் என்று புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.
நடிகை கங்கனாவின் மின்னணு ஊடக பதிவுகள், டுவிட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தனது புகார் மனுவில் நடிகை கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டெல் பெயரையும் சாஹில் சேர்த்து உள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், இருவர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கடந்த அக்டோபரில் மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில், 124ஏ (தேச துரோகம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரி கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம், நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சாண்டெல் ஆகிய இருவரும் வருகிற ஜனவரி 8ந்தேதி போலீசில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதுவரை அவர்கள் இருவருக்கு எதிராக போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்து உள்ளது.