ஆன்லைன் சூதாட்டத்தில் தங்கை ரூ.25 லட்சம் இழப்பு: போலீசில் விளக்கம் அளித்த நடிகை காருண்யா ராம்

ஆன்லைன் சூதாட்டத்தில் தங்கை ரூ.25 லட்சத்தை இழந்தது குறித்து அளித்த புகாரின்பேரில் போலீசார் முன்பு நடிகை காருண்யா ராம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பெங்களூரு,
கன்னட பிக்பாஷ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் காருண்யா ராம். இவர், கன்னட நடிகையும் ஆவார். ‘பெட்ரோமாக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடிகை காருண்யா ராம் நடித்துள்ளார். இவர், பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் தனது பெற்றோருடன் வசிக்கிறார். காருண்யா ராமின் தங்கை சம்ருத்தி ராம். இவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.25 லட்சத்தை இழந்தார். இதற்காக பல்வேறு நபர்களிடம் அவர் கடனும் வாங்கி இருந்தார்.
பின்னர் காருண்யா ராமுக்கு சொந்தமான நகை, பணத்தை எடுத்து கொண்டு சம்ருத்தி ராம் வீட்டை விட்டே சென்று விட்டார். இதுபற்றி கடந்த 2023-ம் ஆண்டே ராஜராஜேஸ்வரிநகர் போலீசில், காருண்யா ராம் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் சம்ருத்தி ராமுக்கு கடன் கொடுத்தவர்கள், காருண்யா ராமிடம் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 16-ந் தேதி தனது தங்கை, அவருக்கு கடன் கொடுத்த 4 பேர் மீது பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் காருண்யா ராம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக காருண்யா ராமுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் நடிகை காருண்யா ராம் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரது தங்கை சூதாட்டத்தில் பணத்தை இழந்தது குறித்து போலீசார் கேட்டு தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
அதே நேரத்தில் தங்கைக்கு கடன் கொடுத்தவர்கள் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது, வாட்ஸ்-அப்பில் திட்டி தகவல் அனுப்பியது குறித்தும் போலீசாரிடம் விளக்கமாக காருண்யா ராம் கூறினார். இதற்கிடையில், போலீஸ் விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த நடிகை காருண்யா ராம், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். உங்களுடன் பேசுவதால் எந்த பிரயோஜனமும் எனக்கு ஏற்படாது என்று கோபத்தில் கூறிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி சென்று விட்டார்.






