

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட பதிவிட்டுள்ளார். அதில் “சேவை மற்றும் பொறுப்புணர்வு மிக்க தலைவராக புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் விஜய் நேற்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடினார். விஜய் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பிறந்த நாளை நடிகராகவும் தவெக தலைவராகவும் கொண்டாடிய விஜய், இந்த ஆண்டு முதல் அமைச்சராகக் கொண்டாடியதால், அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். விஜய்யுடன் நடித்த சக நடிகைகள், நடிகர்கள் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து பதிவிட்டனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து ‘பைரவா’, ‘சர்கார்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக கீர்த்தி சுரேஷ், தனது டிவிட்டர் பதிவில், “இத்தனை ஆண்டுகளாக உங்கள் பிறந்த நாள் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் அல்லது ஒரு படத்தின் அறிவிப்பாக இருந்தது. அதை எதிர்பார்த்து காத்திருப்பது எங்களுக்கு ஒரு சடங்கு. ஆனால், இந்த வருடம் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முதல் முறையாக, இந்த உலகிற்கு ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் காண்கிறோம். நீங்கள் திரையில் ஹீரோவாக உங்களை அறிமுகப்படுத்தவில்லை.
மாறாக, சேவை மற்றும் பொறுப்புணர்வு மிக்க தலைவராக புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த ஆண்டு நாம் புதிய பயணத்தை கொண்டாடுகிறோம். என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.