திரைத்துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை குஷ்பு

சினிமாவுவில் தன்னை அறிமுகப்படுத்திய மறைந்த டி. ராமாநாயுடு, கே. ராகவேந்திர ராவ், சுரேஷ் நாயுடு ஆகியோருக்கும், 40 ஆண்டுகளாக நண்பராக இருக்கும் நடிகர் வெங்கடேஷுக்கும் குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை குஷ்பு
Published on

தனது முதல் தென்னிந்திய திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நடிகை குஷ்பு நினைவுகூர்ந்துள்ளார்.

திரைத்துறையில் நடிகை குஷ்பு 1980 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது 45 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாகப் பயணித்து வருகிறார். 1980 இல் ‘தி பர்னிங் ட்ரெயின்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

தனது முதல் தென்னிந்திய திரைப்படமான ‘கலியுக பாண்டவுலு’ வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நடிகை குஷ்பு நினைவுகூர்ந்துள்ளார். 15 வயதில் தெலுங்கு சினிமா மூலம் தொடங்கிய தனது பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்த ரசிகர்கள், இயக்குநர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் குஷ்பூ கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பூ. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன்.என்னுடைய முதல் தென்னிந்திய மொழிப் படமான ‘கலியுக பண்டவுலு’ 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ல் வெளியானது.

15 வயது சிறுமியாக தென்னிந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாமல் பதற்றத்துடன் இங்கே வந்தேன். இங்கேயே எனது தொழில், வாழ்க்கை, குடும்பம் எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டேன். என்னுடன் நின்று ஆதரிக்கும், நிபந்தனை இல்லாமல் அன்பு செலுத்தும், வழிநடத்தும் அனைவருக்கும் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன்.

என்னை ஏற்றுக்கொண்டு, என் வாழ்வில் பாதியாகி இந்த பயணத்தில் உடன் இருக்கும் என் ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றிகள். நீங்கள் இல்லாமல் நான் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. முதன்முதலாக என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய டி.ராமாநாயுடு, ரகவேந்திர ராவ், சுரேஷ் நாயுடுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த பயணத்தின் மிக அழகான விஷயம், வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் வெங்கடேஷ் போல் ஒரு நண்பர் கிடைத்ததுதான். ஒரு நடிகராக பயணத்தைத் தொடங்கி, நட்சத்திரமாக உயர்ந்த பின்பும் மாறாமல் இருக்கும் அவரது பயணம் எனக்கு எப்போதும் உத்வேகம் தருபவை. கடந்த 40 ஆண்டுகளாக என் வாழ்வில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி வெங்கி. இன்னும் பல ஆண்டுகள் நண்பர்களாக தொடர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com