ரியல் 80ஸ் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை குஷ்பு

இன்ஸ்டாகிராம் செயலியில் தற்போது 80ஸ் லுக் ஏஐ போட்டோஸ் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
ரியல் 80ஸ் புகைப்படங்களை பகிர்ந்த  நடிகை குஷ்பு
Published on

நடிகை குஷ்பு பகிர்ந்த ரியல் 80ஸ் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

திறைத்துறையில் 45 ஆண்டுகளை கடந்த நடிகை குஷ்பு

திரைத்துறையில் நடிகை குஷ்பு 1980 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது 45 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாகப் பயணித்து வருகிறார். 1980 இல் ‘தி பர்னிங் ட்ரெயின்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் குஷ்பூ கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பூ. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

வைரலாகும் 80-ஸ் போட்டோ டிரெண்ட்

இன்ஸ்டாகிராமில் புதிய 80-ஸ் போட்டோ டிரெண்ட் வைரலாகி வருகிறது. இதில், பயனர்கள் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினிபோன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி தங்களின் தற்போதைய புகைப்படங்களை 1980-களின் விண்டேஜ் தோற்றம் கொண்ட படங்களாக மாற்றி வருகின்றனர். பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல், நிறங்கள் மற்றும் கேமரா எஃபெக்ட்களுடன் உருவாகும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இணையத்தில் பலரும் தங்களது புகைப்படங்களை ஏஐ மூலம் எடிட் செய்து 80களில் தாங்கள் இப்படி இருப்போம் என பகிர்ந்து வருகிறார்கள்.

80ஸ் டிரெண்ட்டில் இணைந்த நடிகை குஷ்பு

இந்நிலையில், 80ஸ் டிரெண்டிங்கில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார். நடிகை குஷ்பு அந்த காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் புகைப்பட தொகுப்பை விடியோவாக வெளியிட்டுள்ள நடிகை குஷ்பு “ஏஐ, மெட்டாவினால் உருவாக்கப்பட்டவை அல்ல. அசலான 80ஸ் புகைப்படங்கள்” என கூறியுள்ளார். பின்னர் ஹேஷ்டேக்கில் 80ஸ் டிரெண்ட் எனவும் ஒரிஜினல் எனவும் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com