நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகை மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது மீரா மிதுன் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்த சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு, அவரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மீராமிதுன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் ஆஜராகி வாதாடினார்.

ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், மீரா மிதுனை அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஜாமீன் கேட்டு நடிகை மீரா மிதுன், தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு, மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மேலும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com