

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நமீதா, கடந்த 2017-ல் நடிகர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோவிலில் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை நமீதா குறைத்தார். கடந்த மே மாதம், தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் நமீதா அறிவித்தார். அதோடு, "தாய்மை... புதிய அத்தியாயம் தொடங்கியதால், நான் மாறினேன். நான் விரும்பியதெல்லாம் நீதான். உனது மென்மையான உதைகளை என்னால் உணர முடிகிறது" என்று தாய்மை உணர்வுகளையும் பகிர்ந்தார். கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு நமீதாவும், அவரது கணவரும் 2 கைக்குழந்தைகளை கையில் தூக்கிக்கொண்டு வந்து, பயபக்தியோடு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. "நமீதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதா?" என்று பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து நமீதா தரப்பில் விசாரித்தபோது, நமீதாவுக்கு கடந்த ஜூலை மாதமே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், பிரசவமான தகவலை வெளியே தெரிவிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாகவும், பெயர் சூட்டு விழாவில் குழந்தை பிறந்த விவரத்தை அறிவிக்கலாம் என்று இருந்தாகவும் தெரிவித்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி என்பதால் குழந்தைகளை கோவிலுக்கு கொண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
நமீதாவுக்கும், இரட்டை குழந்தைகளுக்கும் ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.