

நயன்தாரா சினிமா துறையில் அடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு கூடுகிறதே தவிர குறையவில்லை. தென் இந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக இருக்கிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த பிறகும் எப்போதும் போல அதிக படங்கள் கைவசம் வைத்து பிஸியான நடிகையாகவே வலம் வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல்.
சென்னையில் ஏற்கனவே அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் மற்றும் புறநகர் பகுதிகளில் நிலங்களை வாங்கி போட்டுள்ளார். கேரளாவிலும் சொத்துகள் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இரண்டு பங்களாக்களை அவர் வாங்கி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. ஒவ்வொரு வீட்டின் விலை ரூ.15 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஒருபுறம் சொத்துகள் வாங்குவதோடு இன்னொரு புறம் வியாபாரத்திலும் முதலீடு செய்து வருகிறார். எதிர்காலத்தில் சினிமாவை விட்டு விலக நேர்ந்தால் வியாபாரத்துறையில் நீடிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு மிகப்பெரிய அளவில் வியாபாரங்களில் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.