

பரப்பன அக்ரஹாரா,
ரேணுகாசாமி கொலை வழக்கில பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை பவித்ரா கவுடாவுக்கு கு காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி நடிகர் தர்ஷன், அவரது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் பிரஜ்வல் ரேவண்ணாவின், அறையில் செல்போன் மற்றும் பென்டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தர்ஷன் மற்றும் பவித்ரா கவா தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த பவித்ரா கவுடா தற்போது சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று காணொலிகாட்சி மூலம் கொலை வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் பவித்ரா கவுடாவுக்கு காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவரால் நீதிபதியின் முன்பு விசாரணைக்கு ஆஜராக முடியாமல் போனது.
இதுகுறித்து நீதிபதி சுஜாதாவின் கவனத்துக்கு அவரது வக்கீல்கள் கொண்டு சென்றனர். மேலும் நீதிபதி, பவித்ரா கவுடாவின் உடல்நலம் குறித்து அரசு தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு அவர், பவித்ரா கவுடாவுக்கு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதுகுறித்து பவித்ரா கவுடாவின் வக்கீல், அவருக்கு வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்தார். இதனை விசாரித்த நீதிபதி சுஜாதா குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.