ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை அடுத்து தர்ஷனும், பவித்ரா கவுடாவும் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி, தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பவித்ரா கவுடா சார்பில் அவரது தாய் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். தனது மகள் தனியாக இருப்பதாகவும், அவளை கவனித்து கொள்ள வேண்டி இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்குமாறும் கோரினார்.
இந்த மனு மீதான இறுதி விசாரணை சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி, பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்காரணமாக பவித்ரா கவுடா மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இதனால் அவருக்கு இப்போதைக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றால்தான் அவருக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.






