

இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்-ஐ கவுரவிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த இந்த உயர்மட்ட விருந்தில், இந்தியத் திரைத்துறையின் சார்பில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
'மேட் இன் கொரியா' திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. நெட்பிளிக்ஸில் கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளியான இந்த படம், மூன்று வாரங்களுக்குள் 1.35 கோடிப் பார்வைகளைக் கடந்து உலக அளவில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது. தென் கொரியாவில் இந்த படம் பெருமளவில் படமாக்கப்பட்டது.
விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா மோகன், “ராஷ்டிரபதி பவனில் ஒரு மறக்க முடியாத மாலைப்பொழுது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஆகியோரின் முன்னிலையில் கலந்து கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.