

பெங்களூரு,
பெங்களூரு மகாதேவபுரா அருகே டி.ஆர்.டி.ஓ. அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள குடியிருப்பை சுற்றி ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்தன. அவ்வாறு சுற்றிய 25-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திடீரென்று மாயமாகி விட்டது. அத்துடன் ஒரு மினிலாரியில் ஏற்றி செல்லப்பட்ட 3 தெரு நாய்களை அப்பகுதி மக்கள் மீட்டு இருந்தனர். அந்த 3 நாய்களின் கால்கள் மற்றும் வாயை துணிகளால் கட்டியும், பாலிதீன் பைகளில் போட்டு கொண்டு செல்லும் போது மீட்டு இருந்தார்கள்.
இதுதொடர்பாக மகாதேவபுரா போலீசில் அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கும் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. குடியிருப்பை சுற்றி திரியும் தெரு நாய்களை பாதுகாக்க கோரி, சுதந்திர பூங்காவில் அப்பகுதி மக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரம்யாவும் கலந்து கொண்டார். அப்போது நடிகை ரம்யா பேசுகையில், டி.ஆர்.டி.ஓ.வில் நாய்களுக்கு தொல்லை கொடுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தெருநாய்களை பாதுகாக்க வேண்டும், என்றார்.
அந்த சந்தர்ப்பத்தில் தெரு நாய்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகளை நினைத்து நடிகை ரம்யா கண்ணீர் விட்டு அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். தெரு நாய்கள் மீதான தனது அன்புக்காக நடிகை ரம்யா கண்ணீர் விட்டு அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.