விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம்

நடிகை ராஷ்மிகா தன்னிடம் சுமார் 100 தடவை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சியதாக விஜய் தேவரகொண்டா கூறியிருந்தார்.
விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம்
Published on: 

‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா தெரிவித்த கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது மனைவி ராஷ்மிகா மந்தனா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். தங்களது காதலை நீண்டகாலமாக ரகசியமாக வைத்திருந்த இருவரும், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உதய்ப்பூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இணைந்து நடித்த ‘ரணபலி’

திருமணத்துக்குப் பிறகும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இந்தத் தம்பதி, இணைந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படமும் சமீபத்தில் வெளியானது. இவர்களது கூட்டணியில் வெளியான 3வது படம் இதுவாகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

விஜய் தேவரகொண்டா பேச்சு

அப்போது காதல் மற்றும் திருமணம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று ராஷ்மிகா சுமார் 100 தடவையாவது கெஞ்சியிருப்பார். அவருடைய வற்புறுத்தலின் பேரில்தான் இந்தத் திருமணம் நடந்தது. இல்லையென்றால், இன்னும் தாமதமாகியிருக்கும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

சமூக வலைதளங்களில் எதிர்ப்பு

விஜய் தேவரகொண்டாவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து ராஷ்மிகாவை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கருதும் ரசிகர்கள் சிலர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆணாதிக்க மனநிலை

விஜய் தேவரகொண்டாவின் கருத்தில் ஆணாதிக்க மனநிலை வெளிப்படுவதாகச் சுட்டிக்காட்டி பல பெண்கள் அவரை விமர்சித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா மந்தனா தனது கருத்துகளை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

விமர்சனங்களுக்கு ராஷ்மிகா விளக்கம்

ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில் “எனக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் இடையிலான இந்த விவகாரம் குறித்து என்னுடைய சிறிய கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். நேர்காணலை சுற்றி தற்போது உருவாகியிருக்கும் பரபரப்பு, மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதைப் போலத் தெரியவில்லை. மாறாக, தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த யாரையாவது தேடும் கோபம் கொண்ட கும்பலைப் போல இருக்கிறது.

எங்கள் இருவரின் சமூக வலைதளப் பக்கங்களிலும் தேவையற்ற கருத்துகள், விமர்சனங்கள், கேட்கப்படாத அறிவுரைகள் எனத் தொடர்ந்து குவிந்துகொண்டிருக்கின்றன. மக்கள் எங்களை அணுகிய விதத்திலும், தங்கள் கருத்துகளைத் தெரிவித்த உறுதியிலும் நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன்.

திருமணம் குறித்த கருத்து

நான் என்ன விரும்புகிறேன் என்பதைத் துல்லியமாக அறிந்திருந்தது சரிதான். அதேபோல், வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களைப் பற்றி யோசித்து, உறுதியாக முடிவெடுக்க அவருக்குக் கால அவகாசம் தேவைப்பட்டதும் சரிதான். அது எங்களுடைய காதலை எந்த விதத்திலும் மாற்றவில்லை. நான் முழுக்க முழுக்க உணர்வுகளால் இயங்குபவள். அவர் சிந்தித்துச் செயல்படுபவர். எங்கள் வாழ்க்கையில் இந்த இரண்டு குணங்களும் தேவைப்படுகின்றன.

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது ஒருபோதும் காதலை வெளிப்படுத்தும் ஒரு முன்மொழிவைப் பற்றியதோ, ஒருவரின் முன் மண்டியிட்டு மோதிரம் அணிவிப்பதைப் பற்றியதோ அல்ல. அவையெல்லாம் வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமே. எங்களைப் பொறுத்தவரை, ஒன்றாக இணைந்து ஒரு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதுதான் முக்கியம். இதுவரை நாங்கள் அதை அழகாகச் செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன்

உங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒருவரைக் கண்டுபிடியுங்கள். உங்களுக்காக அவர் எவ்வளவு தூரம் செல்வாரோ, அதே அளவுக்கு உங்களுக்காகச் செல்லத் தயாராக இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். ஆம், என் கணவர் மீது எனக்கு அளவுகடந்த காதல் இருக்கிறது. அதில் என்ன தவறு இருக்கிறது? நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணைக் காதலிக்கவில்லை என்றால், வேறு எதற்காக அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?

அவர்தான் என் வாழ்நாள் துணையாக இருக்கப் போகிறார். சாதாரண நாட்களிலும் அசாதாரணமான தருணங்களிலும் எனக்குத் துணையாக இருக்கும் நண்பர். என் குழந்தைகளின் தந்தை. நான் முதுமை அடையும் வரை என்னுடன் வாழப்போகும் மனிதர். உங்களை அழகாகவும் ஆழமாகவும் காதலிக்கும் ஒருவரைக் கண்டுபிடியுங்கள். திருமணத்திற்குப் பிறகும் அவரைப் பார்த்து, “நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?” என்று மீண்டும் சொல்லத் தோன்றும் அளவுக்கு அவர் உங்கள் மீது காதல் கொண்டிருக்க வேண்டும். நான் அவரையே ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன். நூறு முறை என்பது ஒன்றுமே இல்லை. உண்மையில், இது அவ்வளவு எளிமையானதுதான்.

எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்தத் தேர்வுகள், உழைப்பு ஆகியவற்றின் மூலம் எங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறோம். எங்களுடைய வாழ்க்கையை எப்படிச் வாழ வேண்டும், யாருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரமும் வாய்ப்பும் பெற்றவர்கள். நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம். இறுதிவரை மீண்டும் மீண்டும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்போம்.

எங்களுடைய காதல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் விதத்திற்குப் பொருந்தவில்லை என்றால், அதனால் பரவாயில்லை, இல்லையா? உங்களுடைய அழகான கற்பனையை உங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து பாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் நான் மகிழ்ச்சியுடன் கைதட்டுவேன். நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச மனிதநேயம் இதுதான். ஆனால், எங்கள் இருவரில் யாருமே பிரம்மாண்டமான காதல் முன்மொழிவை எதிர்பார்த்திருக்கவில்லை. வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், மகிழ்ச்சிகள், மன அழுத்தங்கள் என அனைத்தையும் கடந்து, ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்குப் போதுமான நேரத்தையும் இடைவெளியையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த உரையாடலின் நோக்கம்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com